செய்திகள்
திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு

Published On 2020-02-21 03:12 GMT   |   Update On 2020-02-21 03:12 GMT
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விடுபட்ட 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் பல சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இல்லாமல் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்பட மேலும் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பிலும் இதுதொடர்பாக நேற்று ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனே நடத்த உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் இந்த மனு ஏற்கனவே உள்ள மனுக்களோடு சேர்க்கப்பட்டு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுபட்ட மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News