செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்த அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள்

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2020-02-20 16:44 GMT   |   Update On 2020-02-20 16:44 GMT
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது அவர்கள் பூமிபூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 15 நபர் கொண்ட அறக்கட்டளைக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு 92 வயது மூத்த வழக்கறிஞரான கே.பராசரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் கைலாஷில் உள்ள அவருடைய வீடே அறக்கட்டளைக்கான அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது.
 
இந்த அறக்கட்டளையில் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ், சுவாமி வாசுவேதன், பிரயாக் ராஜ் ஜகத்குரு மாதவ ஆச்சார்யா சுவாமி வில்வ பிரசாந்த தீர்த் , உடுப்பி யோகபுருஷ் பரமானந்தம் சுவாமி கோவிந்தர் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் சார்பில் விமலேந்தர் மோகனபிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவை சேர்ந்த தலித் பக்தர் கமலேஷ்வர் சவுகான், நிர்மோயி அகரா அமைப்பின் மஹாந்த் தீரேந்திர தாஸ், அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே, டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வீட்டில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, நித்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழு தலைவராகவும், அறக்கட்டளை பொருளாளராக புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பூமிபூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நித்ய கோபால் தாஸ் கூறுகையில், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தோம். அப்போது ராமர் கோவிலின் பூமிபூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News