செய்திகள்
வுகான் செல்லும் ராணுவ விமானம்

இந்தியர்களை மீட்க நாளை சீனா செல்கிறது மேலும் ஒரு விமானம்

Published On 2020-02-19 11:39 GMT   |   Update On 2020-02-19 11:39 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது.
புதுடெல்லி:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. 

இந்த வைரஸ் தாக்கி 2 ஆயிரத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ள வுகான் நகருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக இந்தியர்கள் பலர் சென்றிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய மத்திய அரசு ஏர்-இந்தியா சிறப்பு விமானத்தை வுகான் நகருக்கு அனுப்பி 324 இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்தது. அதன்பின் 2-வது விமானத்தை அனுப்பி மேலும் 300-க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர்.    



நாடு திரும்பிய அனைவரும் டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து 14 நாட்களுக்கு பிறகு முகாமில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும், வுகான் நகரில் 80-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சீனாவுக்கு மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வுகான் நகருக்கு நாளை செல்கிறது. இந்த விமானத்தை பயன்படுத்திய வுகானில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்கள் நாடு திரும்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News