செய்திகள்
டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சந்திப்பு

Published On 2020-02-19 10:04 GMT   |   Update On 2020-02-19 10:04 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ஜனாதிபதியிடம் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கொடுத்தனர்.

புதுடெல்லி:

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.)எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆர்.சி.க்கு வழிவகுக்கும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடத்தப்பட்டது.

இதில் 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 பேர் கையெழுத்திட்டனர்.

மக்கள் கையெழுத்திட்ட இந்த படிவங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து படிவங்கள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று சந்தித்தனர். வைகோ, திருமாவளவன், திருச்சி சிவா, கனிமொழி, மாணிக் தாகூர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்தனர்.

Tags:    

Similar News