செய்திகள்
டிரம்ப்

சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் டிரம்புக்கு காந்தியின் சுயசரிதை, ராட்டை பரிசாக வழங்கப்படுகிறது

Published On 2020-02-19 03:52 GMT   |   Update On 2020-02-19 03:52 GMT
சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு காந்தியின் சுயசரிதை, ராட்டை பரிசாக வழங்கப்பட உள்ளதாக ஆசிரம அறங்காவலர்கள் கூறினர்.
ஆமதாபாத்:

இந்தியாவுக்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடியுடன் வருகிற 24-ந் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்துக்கு நெருங்கிய தொடர்புள்ள அந்த ஆசிரமத்துக்கு வரும் முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து ஆசிரம அறங்காவலர்கள் கார்த்திகேயா சாராபாய், அம்ருத் மோடி ஆகியோர் கூறியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சுமார் 30 நிமிடங்கள் ஆசிரமத்தை பார்வையிடுகிறார்கள். இங்குள்ள ராட்டையில் டிரம்பும், அவரது மனைவியும் நூற்பதற்கு முயற்சிப்பார்கள். டிரம்புக்கு ஒரு ராட்டை, காந்தியின் சுயசரிதை, ‘எனது வாழ்க்கை எனது தகவல்’ ஆகிய 2 புத்தகங்களும், காந்தியின் உருவப்படமும் பரிசாக வழங்குகிறோம். நாட்டின் விடுதலை போராட்டத்தில் இந்த ஆசிரமத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு குறிப்பும் டிரம்பிடம் வழங்கப்படும். முன்னதாக கதர் மாலை அணிவித்து வரவேற்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டிரம்பும், அவரது மனைவியும் வாஷிங்டனில் இருந்து நேரடியாக ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வருவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இங்கிருந்து அவர் தனது 2 நாள் பயணத்தை தொடங்குகிறார்.
Tags:    

Similar News