செய்திகள்
ரெயில் மற்றும் சிவபெருமான் (கோப்பு படம்)

கடவுள் சிவபெருமானுக்கு ரெயிலில் அப்பர் பெர்த் ஒதுக்கிய இந்திய ரெயில்வே நிர்வாகம்

Published On 2020-02-17 12:23 GMT   |   Update On 2020-02-17 12:26 GMT
ஆன்மீக சுற்றுலாவுக்காக இயக்கப்பட உள்ள காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடவுள் சிவபெருமானுக்கு அப்பர் பெர்த் சீட் ஒன்றை இந்திய ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 3 சிவன் கோவில்களை இணைக்கும் விதமாக காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆன்மீக சுற்றுலாவை மையமாக கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் இருந்து கொடியசைத்து துவங்கிவைத்தார். 

இந்த ரெயில் வரும் 20-ம் தேதியில் இருந்து பொதுமக்கள் சேவைக்கு வர உள்ளது. ஆகையால், இந்த ரெயிலில் தங்கள் முதல் பயணத்தை தொடங்க ஆன்மீக பிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.



இந்நிலையில், காசி-மஹாகல் எக்ஸ்பிரஸின் முதல் பயணத்தில் கடவுள் சிவ பெருமானுக்கு ரெயிலில் ஒரு இருக்கையை இந்திய ரெயில்வே ஒதுக்கியுள்ளது. கோட்ச் பி5-ல் உள்ள அப்பர் பெர்த் சீட் எண் 64-ஐ கடவுள் சிவனுக்காக ரெயில்வே ஒதுக்கியுள்ளது. அந்த சீட்டில் கடவுள் சிவனின் புகைப்படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிய ரெயில் சேவை வெற்றிஅடைவதற்காகவும், கடவுளிடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்கவும் சிவனுக்கு பூஜைகள் செய்யப்படுவதாகவும், அந்த இருக்கை அடுத்த பயணத்தின் போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர்.  

Tags:    

Similar News