செய்திகள்
டெல்லியில் மாணவர்களை போலீசார் தாக்கிய வீடியோ.

டெல்லியில் மாணவர்களை போலீஸ் தாக்கிய வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை- ஜாமியா பல்கலைக்கழகம்

Published On 2020-02-17 09:29 GMT   |   Update On 2020-02-17 10:59 GMT
டெல்லியில் மாணவர்களை போலீசார் தாக்கும் இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த மாதம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்றது. இந்த போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டது.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் டிசம்பர் 15-ந்தேதி பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்போது போலீசாரும், துணை ராணுவத்தினரும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்குள் அத்து மீறி நுழைந்து நூலகம் மற்றும் விடுதிகளில் இருந்த மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோனது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் போலீசார் ஜாமியா பல்கலைக் கழகத்தின் நூலகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. போராட்டம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் நடத்தும் தாக்குதல் வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

48 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சிகளில் மாணவர்கள் மீது தங்கள் முகத்தை மூடி கொண்டு போலீசாரும், துணை ராணுவத்தினரும் தடிகளால் தாக்கியது இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருங்கிணைப்பு குழு இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்பு குழு இந்த வீடியோவின் நகலை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கி உள்ளது.

இதற்கிடையே மாணவர்களை போலீசார் தாக்கும் இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News