செய்திகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த தொழிலாளியை மீட்கும் பணி - மீட்கப்பட்ட தொழிலாளி ரோகித்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

Published On 2020-02-17 03:54 GMT   |   Update On 2020-02-17 03:54 GMT
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
மங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் உப்புந்தா கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் கார்வி (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை சக தொழிலாளர்களுடன் மரவந்தே பகுதியில் ஆழ்துளை கிணற்றில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் ரோகித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

20 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் 15 அடியில் அவர் சிக்கி தவித்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் மீட்க முடியவில்லை.

தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ரோகித்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், மக்களை அப்புறப்படுத்தினார்கள்.

ஆழ்துளை கிணற்றில் இருந்த ரோகித் மீது மண் சரியாமல் இருப்பதற்காக அதனை சுற்றி அடிப்புறம் வெட்டப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பேரலை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக வைத்தனர். தீயணைப்பு படையினர் தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தனர். நீண்ட நேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்ததால் ரோகித் மிகவும் சோர்வடைந்தார். இதனால், அங்கிருந்த டாக்டர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தினார்கள்.

பின்னர் தீயணைப்பு படையினர் கொண்டு வந்த ஏணியில் கயிற்றை கட்டி ரோகித்தை மீட்கும் பணி நடந்தது. சேறு அதிகமாக இருந்ததால், அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர் ஒருவர் கயிறு கட்டி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி விடப்பட்டார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரோகித் விழுந்த ஆழ்துளை கிணற்றின் அருகே 6 அடி தள்ளி பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக ரோகித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு துளை போடப்பட்டது. பின்னர் அந்த துளையின் வழியாக ஒரு கயிற்றை ரோகித் விழுந்த கிணற்றுக்கு தீயணைப்பு வீரர்கள் போட்டனர். அந்த கயிற்றை பிடித்து ரோகித் மேலே பத்திரமாக வந்தார்.

அதாவது சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ரோகித்தை உயிருடன் மீட்டனர். அவர் சோர்வாக இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News