செய்திகள்
சிஏஏ போராட்டம் மற்றும் அமித்ஷா

அமித்ஷாவின் அழைப்பை ஏற்ற ஷாகீன் பாக்

Published On 2020-02-16 01:27 GMT   |   Update On 2020-02-16 01:27 GMT
சிஏஏ தொடர்பாக தன்னுடன் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம் என அமித்ஷா விடுத்த அழைப்பை நாங்கள் ஏற்பதாக ஷாகீன் பாக் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் பங்கேற்று சிஏஏ-க்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
 
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 12) தனியார் தொலைக்காட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,   ''குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக தன்னுடன் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்த வரலாம். அதற்கு நான் தயாராக உள்ளேன். என்னுடன் விவாதம் நடத்த வருபவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் உள்துறை மந்திரி விடுத்த அழைப்பை ஏற்று அவருடன் விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சையது அகமது தஷீர் கூறுகையில்,''உள்துறை மந்திரியை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், நாங்கள் எத்தனை பேர் வரவேண்டும் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும்’’ என்றார்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள மெஹ்ருனிசா என்ற பெண் கூறுகையில், 

''போராட்டக்காரர்கள் அனைவரும் இன்று (ஞாயிறுக்கிழமை) உள்துறை மந்திரி அமித்ஷா இல்லம் நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம். அங்கு சென்று சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் இந்த போராட்டம் தொடரும்’’ என்றார்.

அதேபோல் மற்றொரு போராட்டக்காரரான குரேஷி இமாத் அமகது கூறுகையில்,

''ஷாகீன் பாக்கில் இருந்து உள்துறை மந்திரி இல்லம் நோக்கி இன்று (ஞாயிறுக்கிழமை) மதியம் 2 மணிக்கு போரணியாக செல்ல உள்ளோம். போராட்டக்காரர்களுக்கு பிரதிநிதி என யாரும் கிடையாது. ஆனால் சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்க்கும் மக்கள் அனைவரும் சென்று உள்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’’ என அவர் தெரிவித்தார்.   
Tags:    

Similar News