செய்திகள்
உச்ச நீதிமன்றம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-14 06:55 GMT   |   Update On 2020-02-14 06:55 GMT
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
புதுடெல்லி:

தமிழக சட்டசபையில் 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின்போது, அரசு தலைமை கொறடா உத்தரவை மீறி, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோரும் முறையீடு செய்தனர்.



இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர். திமுக கொறடா சக்கரபாணியின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

‘இந்த விஷயத்தில் சபாநாயகர், அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். அதேசமயம் சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News