செய்திகள்
கல்வீச்சில் சேதமடைந்த பேருந்து

கர்நாடகா பந்த்- பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள்

Published On 2020-02-13 05:08 GMT   |   Update On 2020-02-13 05:08 GMT
கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், மங்களூருவில் ஒரு பேருந்து மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.
மங்களூரு:

கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

முழு அடைப்பை முன்னிட்டு கன்னட அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் ஆங்காங்கே திரண்டு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கடை உரிமையாளர்களிடம், கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி வலியுறுத்தினர். 



ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. திருப்பதி-மங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து பாரங்கிபேட்டையில் சென்றபோது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. 

போராட்டக்காரர்கள் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஒருசில ஆட்டோ சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்களை இயக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றன. 
Tags:    

Similar News