செய்திகள்
பேருந்துகள் வழக்கம் போல் இயங்கிய காட்சி

கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்

Published On 2020-02-13 04:39 GMT   |   Update On 2020-02-13 04:39 GMT
தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பெங்களூரு:

கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

வாடகைக் கார்கள், லாரிகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகள், இன்று முழு அடைப்பு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றன. 

முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் இன்று நடக்கவிருந்த தேர்வை தள்ளிவைத்துள்ளது. 

கன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News