செய்திகள்
ஜே.பி. நட்டா

டெல்லி மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

Published On 2020-02-11 16:20 GMT   |   Update On 2020-02-11 16:20 GMT
சட்டசபை தேர்தலில் டெல்லி மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 62  தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 8 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. 

காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார். தொடர்ந்து, 3-வது முறையாக முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக பாஜக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து டுவிட்டரில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள பதிவில், 

டெல்லி சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும் என்றும், சட்டசபையில் பொது பிரச்சினையை பாஜக தொடர்ந்து எழுப்பும் என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றிக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கெஜ்ரிவால் அரசு பணியாற்றும் என்று நம்புவதாகவும் டுவிட்டரில் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
Tags:    

Similar News