செய்திகள்
உச்ச நீதிமன்றம்

எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்திருத்தம் செல்லும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2020-02-10 07:27 GMT   |   Update On 2020-02-10 07:27 GMT
2018ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி:

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு,  எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது. இந்த சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும். 

இந்த சட்டத்திருத்தம் தலித் மக்களால் வரவேற்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2018ல் செய்யப்பட்ட திருத்தம், அரசியலமைப்பு படி செல்லும் என்று கூறினர். அத்துடன், இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய முன் விசாரணை தேவையில்லை, அரசு ஊழியர்களை கைது செய்ய உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு முதன்மை வழக்கு தொடரப்படாவிட்டால், நீதிமன்றம் எப்ஐஆரை ரத்து செய்ய முடியும். முன்ஜாமீனை தாராளமாக பயன்படுத்துவது, பாராளுமன்றத்தின் நோக்கத்தை சிதைக்கும் என்று நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்தார்.
Tags:    

Similar News