செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

அப்சல் குரு நினைவுதினம் - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

Published On 2020-02-09 20:07 GMT   |   Update On 2020-02-09 20:07 GMT
அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதின் 7-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஸ்ரீநகர்:

தலைநகர் டெல்லியில் இந்திய பாராளுமன்றத்தின் மீது 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிகள் அதிநவீன துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதி அப்சல்குரு மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ந் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடப்பட்டார்.

அவரது 7-வது ஆண்டு நினைவுநாளையொட்டி காஷ்மீரில் வேலை நிறுத்தத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் கோடை கால தலைநகரான ஸ்ரீநகரிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட பகுதிகளிலும் அப்சல் குரு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை நிறுத்தப்பட்டது. புகழ்பெற்ற ஸ்ரீநகர் ஞாயிறு சந்தை இயங்கவில்லை.

3 கி.மீ. நீளம் உடைய ரேடியோ காஷ்மீர்-ஹரிசிங் வீதி இடையேயான நெடுஞ்சாலை வெறிச்சோடியது. சட்டம், ஒழுங்கை பராமரிக்க பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகரங்கள், தாலுகா தலைநகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. ஸ்ரீநகரில் பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. அதே நேரத்தில் தனியார் வாகனங்கள் சாலைகளில் ஓடின. நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஜீலம் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் உள்ளிட்ட முக்கிய பாலங்களில் கூடுதல் படையினர் அமர்த்தப்பட்டிருந்தனர். சோப்பூர் உள்ளிட்ட வடக்கு காஷ்மீரில் உள்ள நகரங்களிலும் நூற்றுக்கணக்கான போலீஸ், பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்கள் மீது கல்வீச்சுக்களை தடுக்கிற விதத்தில் ஸ்ரீநகர்- உரி நெடுஞ்சாலையில் கூடுதல் படையினர் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரிலும் பல்வேறு நகரங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. தனியார் வாகனங்கள் மட்டும் ஓடின. மத்திய காஷ்மீர் மாவட்டங்களான கந்தர்பால், பட்காம் ஆகியவற்றிலும் இதே நிலை நீடித்தது.

இதனால் காஷ்மீரில் பெரும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
Tags:    

Similar News