செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சபரிமலை கோவில் நகைகள் எவ்வளவு?- கணக்கிடுவதற்கு தனி குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-07 07:23 GMT   |   Update On 2020-02-07 07:23 GMT
சபரிமலை கோவிலுக்கு சொந்தமான ஆபரணங்கள் குறித்து கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
புதுடெல்லி:

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிப்பது மற்றும் கோவிலுக்கு சொந்தமான ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட தகவலை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சபரிமலை கோவிலுக்கு சொந்தமாக பந்தள அரச குடும்ப பாதுகாப்பில் வெறும் 16 ஆபரணங்கள்தான் உள்ளதா? அரச குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்தாலும் அவை கடவுளுக்கு சொந்தமானவைதானே? சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக  சட்டம் இயற்றுவதில் என்ன சிக்கல்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன், கோவில் ஆபரணங்கள் தொடர்பாக கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்கு,  ஓய்வுபெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனி குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழு, கோவில் நகைகளின் தரம், மதிப்பு மற்றும் வகைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, சீலிட்ட கவரில் வைத்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு 4 வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News