செய்திகள்
ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவானது - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-02-06 13:12 GMT   |   Update On 2020-02-06 13:12 GMT
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவானது என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலங்களவையில் சில உறுப்பினர்கள் கடந்த காலத்தில் சிக்கியுள்ளனர். பழங்கதைகளையே பேசுகின்றனர். ஒரே இடத்தில் தேங்கி நிற்பதையே நல்லொழுக்கமாக மாற்றி வைத்துள்ளனர்.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு விவாதம் நடத்தவில்லை என குலாம் நபி ஆசாத் கூறுவது தவறு. காஷ்மீர் விவகாரத்தில் விவாதம் நடந்ததற்கு நாட்டு மக்களே சாட்சி. எம்.பி.க்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

தெலுங்கானா உருவாக்கத்தின்போது இங்கு என்ன முறை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். தெலுங்கானா உருவாக்கப்பட்டபோது மாநிலங்களவையில் கதவுகள் அடைக்கப்பட்டன. நேரலை நிறுத்தப்பட்டது.

5 ஆகஸ்ட் 2019 ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு கருப்பு நாள் என்று வைகோ ஜி கூறினார். வைகோ ஜி, இது ஜம்மு காஷ்மீருக்கு ஒரு கருப்பு நாள் அல்ல, பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு நாள்.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவானது. இன்று சிறிய நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகம் காணப்படுகின்றன மற்றும் நவீன உள்கட்டமைப்பின் கட்டுமானத்தைப் பொருத்தவரை சிறிய நகரங்கள் முன்னேறி வருகின்றன என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News