செய்திகள்
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு- மோடி பெருமிதம்

Published On 2020-02-06 08:24 GMT   |   Update On 2020-02-06 08:24 GMT
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாடும், விரைந்து முடிவெடுக்கும் திறனும், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுத்தது என பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புதிய இந்தியாவுக்கான பார்வையை ஜனாதிபதி தனது உரையில் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உரையானது,  நம்பிக்கையின் உணர்வைத் தூண்டுகிறது. மேலும்,  எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாடும், விரைந்து முடிவெடுக்கும் திறனும், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுத்தது.



நாங்கள் பழைய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளின் படி பணியாற்றியிருந்தால் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ஒருபோதும் ரத்து செய்யப்பட்டிருக்காது. முத்தலாக் காரணமாக முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 

பழைய வழிமுறைகளின்படி நாங்கள் பணியாற்றியிருந்தால், ராமஜென்ம பூமி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் வந்திருக்காது. இந்தியா-வங்கதேசம் நில ஒப்பந்தம் வந்திருக்காது. 

பல ஆண்டுகளாக, வடகிழக்கு பிராந்தியத்தை புறக்கணிப்பதற்கு, தூரம் ஒரு காரணமாக அமைந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது.  வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறி வருகின்றன. பல துறைகளில் சிறப்பான பணிகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்பகுதிக்கு தவறாமல் வருகை தருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News