பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. , வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய அரசு, 10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையிலேயே வளர்ச்சி 5 சதவீதம்தான் இருக்கும். தொடர்ந்து 6 காலாண்டுகளாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 7-வது காலாண்டிலும் வீழ்ச்சி ஏற்பட்டால், வீழ்ச்சி தொடரும் என்றும், நாம் மீள்வது கடினம் என்றும் அர்த்தம்.
நாம் நொண்டி அடித்துக் கொண்டுதான் இருப்போம். பணமதிப்பிழப்பு, குறைபாடான ஜி.எஸ்.டி. அமலாக்கம், வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
கம்பெனி வரியை குறைப்பதற்கு பதிலாக, ஜி.எஸ்.டி. வரியை குறைத்திருந்தால், லட்சக்கணக்கானோர் கைகளில் பணம் புழங்கி, முதலீட்டுக்கு வழிவகுத்து இருக்கும். மக்கள் கைகளில் பணம் புழங்க நூறு நாள் வேலை திட்டம், விவசாயிகள் நிதி உதவி திட்டம் போன்றவற்றில் அதிக பணத்தை போட்டு இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஒதுக்கீட்டை குறைத்துள்ளனர். இதனால், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் வாய்ப்பை மத்திய அரசு தவற விட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.