செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிக்க வாய்ப்பு - சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

Published On 2020-02-05 06:03 GMT   |   Update On 2020-02-05 06:03 GMT
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் 2018-ம் ஆண்டு கணக்கீட்டின்படி புற்றுநோயில் 11.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆய்வின் அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளாகும் 5 லட்சத்து 70 ஆயிரம் ஆண்களில் அதிகப்படியானோர் வாய்ப்புற்று நோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 87 ஆயிரம் பெண்களில் மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்று நோய், குடல் புற்றுநோய் ஆகிய பிரச்சினைகளில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.

இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரை புகையிலை தொடர்பான வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியிலும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் பெண்கள் மத்தியிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

அதேநேரம் மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்று நோய் அதிக எடை, உடல் பருமன் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. போதிய உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் ஏற்படுகிறது.

உலகில் புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஆண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புற்று நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ பலருக்கு வசதி இல்லாததும், இந்த நோய் பெருகுவதற்கான காரணங்களில் ஒன்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News