செய்திகள்
மோடி, உத்தவ் தாக்கரே

புல்லட் ரெயில் திட்டத்தால் மகாராஷ்டிராவிற்கு என்ன பயன்?-மோடிக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

Published On 2020-02-05 01:56 GMT   |   Update On 2020-02-05 01:56 GMT
மும்பை - ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டத்தால் மகாராஷ்டிராவிற்கு என்ன பயன்? என பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை :

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை - குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 508.17 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் ​​2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு மத்தியில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு அளித்த ஒரு பேட்டியில் உத்தவ் தாக்கரே புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:-

புல்லட் ரெயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் (மோடி) விழித்து எழும் போது அந்த கனவு கலைந்து விடும். பிரதமர் எதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்?.

மராட்டியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இந்த திட்டம் எப்படி உத்வேகம் அளிக்கும்? என்பது குறித்து முதலில் எனக்கு தெரிவியுங்கள். பின்னர் மக்கள் முன்னர் சென்று என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவு எடுப்போம்.

விவசாயிகள் நிலத்தை எந்த காரணமும் இன்றி கையகப்படுத்தி, அதன்பிறகு வெள்ளை யானையை காண முற்படுகிறோம். இது சரியானது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News