செய்திகள்
மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்

குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை: பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-02-04 23:37 GMT   |   Update On 2020-02-04 23:37 GMT
தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

அசாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, அங்கு குடிமக்கள் பதிவேடு தயாரிக்க ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் அப்பணி நடந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 19 லட்சம் பேரின் விடுபட்டிருந்தது. நாடு முழுவதும் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபோல், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார். அதன்மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார் கள் என்று அவர் கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 22-ந் தேதி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். கடந்த 2014-ம் ஆண்டு தனது அரசு பதவிக்கு வந்ததில் இருந்து நாடாளுமன்றத்திலோ அல்லது மந்திரிசபையிலோ குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அதனால்தான், கடந்த 31-ந் தேதி, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையில், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எதுவும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், குடிமக்கள் பதிவேடு குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு நேற்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News