செய்திகள்
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

Published On 2020-02-04 07:37 GMT   |   Update On 2020-02-04 07:37 GMT
துணை முதல்வர் ஒ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை வரும் 14-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதுடெல்லி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனால் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.



இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோரும் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  ஓபிஎஸ் உள்ளிட்ட  11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் திமுக கொடுத்த மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா? இந்த வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. 

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News