செய்திகள்
டெல்லியில் நேற்று துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற காட்சி.

குடியுரிமை சட்ட விவகாரம் : டெல்லியில் மீண்டும் துப்பாக்கி சூடு - உத்தரபிரதேச வாலிபர் கைது

Published On 2020-02-01 19:24 GMT   |   Update On 2020-02-01 19:24 GMT
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய உத்தரபிரதேச வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 30-ந் தேதி, டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக சென்றபோது, 17 வயதான ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கியால் சுட்டவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

2 நாட்களே ஆன நிலையில், டெல்லியில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. டெல்லி ஜாமியா நகரில் உள்ள ‌ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15-ந் தேதியில் இருந்து குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்துக்காக ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில், அந்த மேடைக்கு பின்னால் 250 மீட்டர் தொலைவில் போலீஸ் தடுப்புகளுக்கு அருகே வந்த ஒரு வாலிபர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் 2 ரவுண்டு சுட்டார்.அப்போது, ‘இந்து ரா‌‌ஷ்டிரம் ஜிந்தாபாத்’ என்று அவர் கோ‌‌ஷமிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் அந்த நபரை பாய்ந்து அமுக்கினர். அவரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.அப்போது, போலீசார் அந்த நபரிடம் பெயர் கேட்டனர். அதற்கு அவர், தன் பெயர் கபில் குஜ்ஜார் என்றும், உத்தரபிரதேச மாநிலம் தல்லுபுரா கிராமத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்தார். அவரின் அடையாளத்தை சரிபார்த்து வருவதாக போலீசார் நிருபர்களிடம் கூறினர்.

சில நாட்களுக்கு முன்பு, உள்ளூர் ஒப்பந்ததாரர் ஒருவர் துப்பாக்கியுடன் ‌ஷாகீன் பாக்குக்கு வந்து, போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு போராட்டக்காரர்களை மிரட்டினார். அதைத் தொடர்ந்து, ‌ஷாகீன் பாக்கில் இச்சம்பவம் நடந்துள்ளது.
Tags:    

Similar News