செய்திகள்
வெடி விபத்து ஏற்பட்ட பகுதி

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலி - உ.பி.யில் பரிதாபம்

Published On 2020-01-31 17:14 GMT   |   Update On 2020-01-31 17:14 GMT
உத்தர பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று நடந்த வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டம் கன்ஹலா நனுப்பூர் கேட் பகுதியில் ஒரு பட்டாசு தயாரிக்கும் சிறு தொழிற்சாலை இயங்கிவந்தது. அந்த ஆலையில் இன்று வழக்கம்போல 5 பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு தயாரிக்கும் இடம் முற்றிலும் தீக்கிரையாகியது மட்டுமல்லாமல் அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்புக் குழுவினரும் தீ விபத்தில் படுகாயமடைந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், மீட்பு படையினர் வருவதற்கு முன்னரே பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேரும் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையில், வெடிவிபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News