செய்திகள்
மத்திய அரசு

5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

Published On 2020-01-31 02:23 GMT   |   Update On 2020-01-31 02:23 GMT
நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையானது நாடு முழுவதும் போலீஸ் துறை குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளிக்கிறது. அதன்படி கடந்த 1-ந்தேதி நிலவரப்படி தயாரிக்கப்பட்ட போலீஸ் அமைப்பு தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதில் நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட 25 லட்சத்து 95 ஆயிரத்து 435 போலீஸ் பணியிடங்களில், மொத்தம் 20 லட்சத்து 67 ஆயிரத்து 270 போலீசாரே தற்போது பணியில் உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட 1,24,719 போலீஸ் பணியிடங்களில் 1,10,186 போலீசார் பணியில் உள்ளனர். இதைப்போல புதுச்சேரியில் 4,462 போலீசார் பணியிடங்களில் 3,458 போலீசார் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.



நாடு முழுவதும் பெண் போலீசாரின் எண்ணிக்கையை பொறுத்தவரை மொத்தம் 1,85,696 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இது மொத்த போலீசார் எண்ணிக்கையில் 8.98 சதவீதம் ஆகும்.

இதைப்போல மொத்தம் அனுமதிக்கப்பட்ட 10 லட்சத்து 98 ஆயிரம் மத்திய ஆயுதப்படை போலீசாரில், 9 லட்சத்து 99 ஆயிரம் பணியிடங்களே நிரப்பப்பட்டு உள்ளன. இந்த படையிலும் பெண்களின் எண்ணிக்கை 29,532 ஆக உள்ளது. இது மொத்த படையினரின் எண்ணிக்கையில் வெறும் 2.95 சதவீதம் ஆகும்.

1 லட்சம் மக்களுக்கு வெறும் 158.22 என்ற விகிதத்திலேயே போலீசார் பணியில் இருக்கின்றனர். ஆனால் 198.65 என்ற எண்ணிக்கையே மேற்படி மக்கள் தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News