செய்திகள்
சீனா கொடி

கொரோனா வைரஸ் நோய்- இந்தியர்களை அனுப்ப சீனா தயக்கம்

Published On 2020-01-29 10:16 GMT   |   Update On 2020-01-29 10:32 GMT
கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால் சீனாவில் உள்ள இந்தியர்களை அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.

புதுடெல்லி:

சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் தான் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. மாகாணத்தின் தலைநகராக உகான் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நோய் பரவி வருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

தற்போது 5,974 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,459 பேரை புதிதாக தாக்கி உள்ளது.

சீனாவின் தலைநகரம் பீஜிங், வர்த்தக தலைநகரமான ஷாங்காய் ஆகியவற்றிலும் நோய் தாக்கி உள்ளது. அந்த இருநகரங்களிலும் முதன் முறையாக தலா ஒருவர் பலியாகி உள்ளனர். நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி வார்டுகள் உருவாக்கப்பட்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 


மனிதர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு நோய் பரவுவதால் மக்கள் கூடுவது, வெளியில் நடமாடுவது போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமான போக்கு வரத்து, ரெயில் போக்குவரத்து போன்றவை பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹூபெய் மாகாணத்தில் 16 நகரங்கள் உள்ளன. அந்த நகரங்களுக்கும் மாநில தலை நகரமான உகானுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

உகான் பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உகான் நகரம் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை கொண்ட உயர் கல்வி மையமாகும்.

இங்கு உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த நகர பகுதியில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. அங்கும் வெளிநாட்டினர் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

தங்களையும் நோய் தாக்கலாம் என்ற பீதி அவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சொந்த நாட்டுக்கு திரும்பிவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், யாரையும் வெளியேற அனுமதிக்காததால் அவர்களால் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.

ஏற்கனவே உகான் நகர விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு விட்டதால் அவர்கள் வெளியேறி வந்தாலும் கூட சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை இருக்கிறது.

உகான் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 700 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். அவர்களும் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி எப்படியாவது எங்களை மீட்டு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். அவர்களை மீட்டு வருவதற்கு மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சீன அரசு இதுவரை அதற்கு அனுமதி தரவில்லை. அவ்வாறு அனுமதி கிடைத்து விட்டால் உடனடியாக உகான் நகருக்கு சென்று மாணவர்களை அழைத்து வருவதற்காக 423 இருக்கைகள் கொண்ட ஏர் இந்தியா விமானத்தை மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது.

இந்த விமானம் டாக்டர்கள் குழுக்கள் மற்றும் உபகரணங்களுடன் மும்பை விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் விமானம் அங்கு சென்று அவர்களை அழைத்து வரும். இதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இது சம்பந்தமாக வெளியுறவு மந்திரி ஜெயசங்கர் கூறியதாவது:-

 


இந்திய மாணர்வர்களை உடனடியாக மீட்டு வர எல்லா அவசர நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக மாணவர்களை சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டுள்ளோம். இதற்காக தனி குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு உரிய தகவல்கள் அனுப்பப்படுவதுடன் அவர்களிடம் இருந்தும் தகவல்களை பெற்று வருகிறோம்.

சீனாவில் தங்கி உள்ள இந்திய மாணவர்கள் யாருக்கும் நோய் தாக்குதல் ஏற்படவில்லை. அவர்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். சீன அனுமதி கிடைத்ததும் இந்தியா அழைத்து வரப்படு வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், சீன அரசு அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அனுப்புவதில் கெடுபிடி காட்டி வருகிறது. அவர்களால் மற்ற நாடுகளில் நோய் பரவி விடக்கூடாது என்பதால் மிக கவனமாக பிரச்சினையை கையாளுகிறார்கள்.

மேலும் தங்கள் நாட்டுக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதால் வெளிநாட்டினரை அனுப்புவதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.

இதனால் தான் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கான விமானத்துக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, மாணவர்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இப்போது ஒருசில நாட்டை சேர்ந்தவர்களை மட்டும் வெளியேற அனுமதித்து இருக்கிறார்கள்.

அதன்படி உகான் நகரில் இருந்து ஜப்பானுக்கு ஒரு விமானம் சென்றுள்ளது. அதில், 206 ஜப்பானியர்கள் வெளியேறி உள்ளனர். இன்னும் 400 ஜப்பானியர்கள் வெளியேறுவதற்காக காத்து இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த விமானத்தில் அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள்.

அதே போல் இன்னொரு விமானம் உகான் நகரில் இருந்து அமெரிக்காவில் உள்ள அன்சோரேச் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதில் எத்தனை பயணிகள் சென்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை.

இதேபோல் தென் கொரியா, பிரான்ஸ், மங்கோலியா ஆகிய நாடுகளும் தங்களது நாட்டு பயணிகளை அழைத்து வருவதற்காக விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளன.

இப்போதுதான் வெளி நாட்டினர் வெளியேறுவதற்கு அனுமதித்து இருப்பதால் இந்தியர்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே உகான் நகரில் சிக்கி தவிக்கும் 700 இந்திய மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதாக கூறி உள்ளனர்.

அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. எனவே, பொருட்களை வாங்க பணம் இல்லாமல் தவிப்பதாக பல மாணவர்கள் கூறியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த தேஜாஸ் சர்மா என்ற மாணவர் கூறும்போது, நாங்கள் தங்கி இருக்கும் அறைகளில் இருந்து வெளியேற கூடாது என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள். எனவே, அங்கேயே முடங்கி கிடக்கிறோம்.

பகல் 12 மணியில் இருந்து 2 மணி வரை மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள். அப்போது தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருகிறோம்.

நாங்கள் அனைவரும் பீதியில் தவிக்கிறோம். என்ன நடக்கும்? என்றே தெரியவில்லை. குடிநீர் சப்ளை கூட நின்று விட்டது.

எனவே, குளியல் அறை தண்ணீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகிறோம் என்று கூறினார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த திக்ஷாசிங் என்ற மாணவர் கூறும்போது, விலைவாசி அதிகமாக உயர்ந்து விட்டதால் எங்கள் செலவு 2 மடங்கு ஆகி விட்டது. தக்காளி, பால், காய்கறி என அனைத்து விலையும் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் சீன அரசின் கல்வி உதவி தொகை மூலம் படித்து வருகிறோம். விலை ஏற்றத்தால் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறினார்.

அசாமை சேர்ந்த கவுரவ்நாத் என்ற மாணவர் கூறும்போது, பணம் கொடுத்தாலும் கடைகளில் பொருட்கள் கிடைப்பது இல்லை. பொருட்கள் வாங்க மக்கள் ரகளையில் ஈடுபடும் நிலை உருவாகி உள்ளது.

இங்குள்ள மாணவர்கள் அனைவரும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் ஆராய்ச்சி மாணவர் கூறும்போது, எந்த நேரத்தில் எங்களை நோய் தாக்குமோ? என்ற அச்சத்தில் உலாவி வருகிறோம்.

நாங்கள் தங்கி இருக்கும் வளாகத்தை முற்றிலும் மூடிவிட்டார்கள். வெளி தொடர்பு எதுவும் இல்லை. வெளியேறவும் வழியில்லை. எப்படியாவது இந்திய அரசு மீட்டு சென்று விடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News