செய்திகள்
கிணற்றுக்குள் விழுந்த பேருந்து

ஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக உயர்வு

Published On 2020-01-29 06:25 GMT   |   Update On 2020-01-29 06:25 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகி கிணற்றில் விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. மேஷி காட் அருகே நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவினர். கிணற்றுக்குள் தலைகீழாக பேருந்து விழுந்ததால் பயணிகள் பலர் தண்ணீரில் மூழ்கினர். மேற்பகுதியில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள், பின்பக்க கண்ணாடி வழியாக கயிறு கட்டி மீட்கப்பட்டனர். 



நேற்று இரவு நிலவரப்படி 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

அதன்பின்னர் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News