செய்திகள்
ஓரினசேர்க்கையாளர்கள்

கேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2020-01-28 07:43 GMT   |   Update On 2020-01-28 07:43 GMT
கேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்ய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் நிகேஷ்.

நிகேசின் நண்பர் சோனு. ஓரின சேர்க்கையாளர்களான இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க எந்த மதத்தினரும் முன்வரவில்லை. திருமண சடங்குகளையும் யாரும் செய்துவைக்கவில்லை.

மேலும் நிகேஷ்- சோனு ஜோடியின் திருமணத்தை பதிவு செய்ய திருமண பதிவு அலுவலரை அணுகிய போது, அவரும் திருமணத்தை பதிவு செய்ய மறுத்து விட்டார்.

இதையடுத்து நிகேஷ்- சோனு ஜோடி கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு நவ்தேஜ் சிங் ஜோகர், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஓரினசேர்க்கை தவறல்ல என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஓரினசேர்க்கையாளர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.



கேரளாவில் நாங்கள் திருமணம் செய்து கொண்ட பின்பு எங்களை பலரும் அவமரியாதை செய்தனர். எங்களது திருமணத்தை பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையும், கோர்ட்டு அவமதிப்பும் ஆகும். எங்களின் திருமணத்தை பதிவு செய்வதோடு, எங்களுக்கு உரிய மரியாதை அளிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

நிகேஷ்-சோனு தாக்கல் செய்த மனுவில் 1954-ம் ஆண்டு சிறப்பு திருமண சட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் திருமணமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது பாலின பாகுபாட்டை காட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News