செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா 100 சதவீத பங்குகளும் விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-01-27 20:57 GMT   |   Update On 2020-01-27 20:57 GMT
பெரும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது.

இதேபோல், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது. எனினும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதும் விற்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதாவது இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய முதலீடு மற்றும் பொதுசொத்து மேலாண்மை துறை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், லாபமற்ற பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 100 சதவீத பங்குகளையும், ஏ.ஐ.எஸ்.ஏ.டி.எஸ். கூட்டு நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில், விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களும், தகுதி வாய்ந்த தனிநபர்களும், வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணி வரை நிறுவனத்தை வாங்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும், தகுதியான நிறுவனங்களின் பட்டியல் மார்ச் 31-ந் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோர் நிலுவையில் உள்ள கடனில் சுமார் ரூ.23 ஆயிரம் கோடி தொகையை ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News