செய்திகள்
திக்விஜய் சிங்

குடியுரிமை சட்ட திருத்தம்: எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - திக் விஜய் சிங்

Published On 2020-01-27 18:28 GMT   |   Update On 2020-01-27 18:28 GMT
குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பாளர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
செஹோர்:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து உள்ளன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காள  மாநில சட்ட பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பாளர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் “ குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. தற்போது குடியுரிமை சட்ட திருத்தம், என்.பி.ஆர்., என்.சி.ஆருக்கு எதிரான போராட்டங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து சென்று விட்டது. தற்போது இந்த போராட்டங்கள் உணர்ச்சிப் பூர்வமான போராட்டங்களாக மாறி உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு( NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC), அதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்தம் (CAA) ஆகியவை நிறைவேற்றப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். அவர்கள் இப்போது இந்த பிரச்னைகளை ஒழுங்கான முறையில் கையாள வேண்டும் என்று நினைத்தால், பிரதமர் மோடியும்,  அமித் ஷாவும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டக்காரர்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு இந்த இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசம் அடையும்” என்று தெரிவித்தார். 
Tags:    

Similar News