செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா எதிர்ப்பு

Published On 2020-01-27 08:46 GMT   |   Update On 2020-01-27 08:46 GMT
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்திருப்பதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை தொடர்பாக, கடுமையான 6  தீர்மானங்களை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 6 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தினால், உலக அளவில் அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்றும், இது மிகப்பெரிய மனித பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.



மேலும், சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அழைத்து பேசாமல், பெரும்பாலான தலைவர்கள் அவர்களை மிரட்டுவதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள், நாளை மறுநாள் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற கூட்டத்தின்போது விவாதத்திற்கு வருகிறது. ஜனவரி 30 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். 

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்கள் குறித்த அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. 

‘ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது வரைவுத் தீர்மானத்தை கொண்டுவர விரும்புவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு பொது விவாதத்திற்குப் பிறகு உரிய செயல்முறை மற்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரைவு தீர்மானத்தை கொண்டு வருபவர்கள் அதற்கு முன், உண்மைகளை துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள் என்று  அரசாங்கம் நம்புகிறது’ என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News