செய்திகள்
கோப்பு படம்

குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க சொன்ன மாவோயிஸ்டுகள் - கல்லால் அடித்தே கொன்ற கிராம மக்கள்

Published On 2020-01-26 12:31 GMT   |   Update On 2020-01-26 15:22 GMT
ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் குடியரசு தின விழாவை கருப்பு நாளாக அனுசரிக்க சொன்ன மாவோயிஸ்டுகளை கிராம மக்கள் கல்லால் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். 

தாங்கள் பதுங்கி வாழும் பகுதிகளுக்கு அருகே உள்ள கிராம மக்கள் மீது அவ்வப்போது மாவோயிஸ்டுகளும், நக்சலைட்டுகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாட மாநில தனிப்படை பிரிவினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள ஜந்துராய் என்ற மலை கிராமத்திற்குள் நேற்று நள்ளிரவு இரண்டு மாவோயிஸ்டுகள் நுழைந்தனர். அங்கு வசித்து வந்த கிராம மக்களிடம் நீங்கள் குடியரசு தின விழாவை கொண்டாட வேண்டாம் எனவும் அதை கருப்பு நாளாக அனுசரிக்கும்படியும் எச்சரிக்கை விடுத்தனர்.



இதனால், மாவோயிஸ்டுகளுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கிராம மக்களை மிரட்டும் நோக்கில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்கள் உயிரை தற்காத்துக்கொள்ள கற்களை வீசியும், வில், அம்புகளை எய்தும் மாவோயிஸ்டுகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

கிராம மக்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு மாவோயிஸ்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்றொரு மாவோயிஸ்ட் படுகாயமடைந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த மாவோயிஸ்ட்டின் உடலை கைப்பற்றினர். மேலும், காயமடைந்த மாவோயிஸ்டை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 

ஒடிசாவில் கிராம மக்கள் ஒன்றினைந்து மாவோயிஸ்டை கற்களால் அடித்தே கொன்ற சம்பவம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களின் இந்த செயலுக்கு மாவோயிஸ்டுகள் பழிவாங்கலாம் என அஞ்சப்படுவதால் அக்கிராமம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News