செய்திகள்
தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

குடியரசு தினவிழா கொண்டாட்டம் - டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி

Published On 2020-01-26 04:39 GMT   |   Update On 2020-01-26 04:39 GMT
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
புதுடெல்லி:

நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் போல்சனரோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.
Tags:    

Similar News