செய்திகள்
இந்தியா-பிரேசில் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

இந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Published On 2020-01-25 08:44 GMT   |   Update On 2020-01-25 08:44 GMT
டெல்லியில் பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சனரோவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னர், இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி:

நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்துள்ளது. 

பிரேசில் அதிபருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். 

அதன்பின்னர் பிரேசில் அதிபர் போல்சனரோ, பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்கள் முன்னிலையில், இரு நாடுகளின் உயர்மட்டக்குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, பயோ எனர்ஜி உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



அதனைத் தொடர்ந்து, பிரேசில் அதிபர் போல்சனரோ, பிரதமர் மோடி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். இதற்கான செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளோம். 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பிரேசில் நாடு மதிப்புமிக்க கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பிரேசில் அதிபர் போல்சனாரோவின் இந்தியா வருகையானது, இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. 

இவ்வாறு மோடி பேசினார்.
Tags:    

Similar News