செய்திகள்
கோப்பு படம்

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு

Published On 2020-01-25 00:38 GMT   |   Update On 2020-01-25 00:38 GMT
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையிட்டது.
புதுடெல்லி:

தமிழக சட்டசபையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தி.மு.க. தரப்பிலும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர் பாரதீய ஜனதாவுக்கு தாவி மந்திரியான சியாம் குமாரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யாததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 21-ந்தேதி விசாரித்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு, மனுதாரர்கள் மீண்டும் சபாநாயகரை நாடவேண்டும் என்றும், அவர் 4 வாரங்களில் முடிவு எடுக்க தவறினால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என்றும் தீர்ப்பு கூறினார்கள். சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய கோரும் வழக்கு தொடர்பாக முறையீடு ஒன்றை தெரிவித்தார்.

அப்போது, “மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கில் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் 4 வாரங்களில் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக் கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில், மணிப்பூர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று முறையிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News