செய்திகள்
கோப்பு படம்

குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கக்கூடாது - தேர்தல் கமிஷன் யோசனை

Published On 2020-01-24 20:15 GMT   |   Update On 2020-01-24 20:15 GMT
குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ‘டிக்கெட்’ கொடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

அரசியல் குற்றமயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக, வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் விவரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை பத்திரிகை மற்றும் டி.வி.களில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு பலன் அளிக்காததால், வேறு தீர்வு வேண்டும் என்று கோரி, பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்கு விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அது, அரசியல் குற்றமயமாவதை தடுக்க உதவவில்லை.

ஆகவே, வேட்பாளர்களுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசியல் குற்றமயமாவதை தடுப்பதற்கான வழிமுறையுடன் ஒரு வாரத்தில் கோர்ட்டை அணுகுமாறு தேர்தல் கமிஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், மனுதாரர் அஸ்வினி உபாத்யாயாவும், தேர்தல் கமிஷனும் ஒன்றாக அமர்ந்து பேசி, அரசியல் குற்றமயமாவதை தடுப்பதற்கான யோசனைகளை உருவாக்குமாறு வலியுறுத்தினர்.
Tags:    

Similar News