செய்திகள்
ராமர் பாலம்

தேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா?

Published On 2020-01-24 03:16 GMT   |   Update On 2020-01-24 03:16 GMT
ஏராளமான மனுக்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, 3 மாதங்களுக்கு பிறகு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை குறித்து 3 மாதத்துக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக கருதப்படுகிறது. சீதையை மீட்க ராமர் இலங்கை செல்வதற்கு வசதியாக வானர சேனைகள் இந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது.

இந்த பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்தது.



இதற்கிடையே, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதற்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த நவம்பர் 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், மீண்டும் கோர்ட்டை அணுக சுப்பிரமணியன் சுவாமிக்கு உரிமை அளித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார். மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால், தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஏராளமான மனுக்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி பாப்டே, ‘‘3 மாதங்களுக்கு பிறகு சொல்லுங்கள். அப்போது பரிசீலிக்கிறோம்” என்று கூறினார்.
Tags:    

Similar News