செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான வழக்கு 2 வாரம் ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-01-23 23:45 GMT   |   Update On 2020-01-23 23:45 GMT
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதவிர, காவிரி நீர் பங்கீடு வழக்கில் படுகையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மேல்படுகையில் உள்ள கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் அதை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மேகதாது திட்டத்துக்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர், ஆணைய தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ஹேமந்த் குப்தா, தினே‌‌ஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பதால் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், மூத்த வக்கீல் வேறு ஒரு வழக்கில் ஆஜராக வேண்டி இருந்ததால் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட, நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News