செய்திகள்
குழந்தை காங்கிரஸ் ஜெயின்

ராஜஸ்தானில் ருசிகரம் - குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்த கட்சி ஊழியர்

Published On 2020-01-23 11:18 GMT   |   Update On 2020-01-23 11:18 GMT
ராஜஸ்தானில் முதல் மந்திரி அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின், தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதல் மந்திரி அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், அவரது குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை மாநில அரசு இன்று வழங்கியது. அதில் குழந்தையின் பெயர் காங்கிரஸ் ஜெயின் என பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுதொடர்பாக வினோத் ஜெயின் கூறுகையில், எங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டது. இந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைத்து விடுவேன்.

காங்கிரஸ் என இந்த குழந்தைக்கு பெயரிட முதலில் எனது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்தேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

வினோத் ஜெயினுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். 18 ஆண்டுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News