செய்திகள்
சிவசேனா

கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரசை அணுகவில்லை: சிவசேனா விளக்கம்

Published On 2020-01-23 02:14 GMT   |   Update On 2020-01-23 02:14 GMT
2014 சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரசை அணுகவில்லை என்று சிவசேனா விளக்கம் அளித்து உள்ளது.
மும்பை :

2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போதும் கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரசை அணுகியதாக முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியிருந்தார். ஆனால் சிவசேனாவின் இந்த திட்டத்தை உடனடியாக நிராகரித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சிவசேனாவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும், காங்கிரஸ் தலைவரான பிரிதிவிராஜ் சவான் கருத்துக்கு சிவசேனா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வற்புறுத்தி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா, பாரதீய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. எனவே இந்த பிரச்சினையில் மகத்துவம் எதுவும் இல்லை. ஆனால் பாரதீய ஜனதா பெரிதுப்படுத்துகிறது.

அந்த தேர்தல் முடிவை தொடர்ந்து ஆட்சியமைக்க காங்கிரசை சிவசேனா அணுகியதாக கூறும் பேச்சுக்கே இடம் இல்லை. அப்போது நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் மனநிலையில் இருந்தோம். பாரதீய ஜனதா தனித்து ஆட்சி அமைத்தபோது, தேசியவாத காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறினார். (பின்னாட்களில் பாரதீய ஜனதா அரசில் சிவசேனா இணைந்து கொண்டது).

இந்த தடவை (2019) தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களை பிடித்து இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்க வேண்டும். 2014 சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாரதீய ஜனதா திடீரென கூட்டணியை முறித்து கொண்டு தனது உண்மை முகத்தை காட்டிய நிலையில், இந்த தடவை திடீர் ஆட்சி அமைத்ததன் மூலம் அந்த கட்சியின் உண்மை முகம் தொடர்ந்து வெளிப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதாவின் சூழ்ச்சியை சரத்பவார் முறியடித்தார். சோனியா காந்தியும் கூட்டணி திட்டத்தை நிராகரிக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News