செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷா

அமித்ஷாவின் சவாலுக்கு நாங்கள் தயார்... அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி

Published On 2020-01-22 17:27 GMT   |   Update On 2020-01-22 17:27 GMT
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா? என அமித்ஷா விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தெரிவித்துள்ளனர்.
லக்னோ:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று பேரணி நடைபெற்றது. 

அந்த பேரணியில் பங்கேற்ற பாஜக கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, 'எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி என்னுடன் பொதுமேடையில் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா?’ என சவால் விடுத்தார்.

இந்நிலையில், லக்னோவில் இன்று நடைபெற்ற ஒரு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அமித்ஷா விடுத்த சவாலை ஏற்பதாகவும் அவருடன் பொது மேடையில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலில் முதல் முறையாக ஒரு சட்டம் மத ரீதியில் கொண்டுவரப்பட்டுள்ளதால் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மிகவும் பதற்றமான நிலையில் உள்ளனர். 

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது. 



போராட்டங்களை பெண்கள் முன்னேடுத்து நடத்தும்போதே இச்சட்டம் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.    

குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பாஜக தலைவர்களுடன் (அமித்ஷா) பொது மேடையில் விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். 

ஆனால், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் மத்திய அரசின் துன்புறுத்தல்களால் உயிரிழக்கும் மக்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் பாஜக விவாதம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் உள்துறை மந்திரியின் சவாலை ஏற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 

'நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் பிரச்சனைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றை எதிர்த்து இளைஞர்களும், பெண்களும் நடத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டங்களால் தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய அரசு விடுத்துள்ள சவாலை சந்திக்க பகுஜன் சமாஜ் தயாராக உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக எந்த மேடையிலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்த தயார்’ 

என அவர் பதிவிட்டுள்ளார்.     
Tags:    

Similar News