செய்திகள்
தலைமை நீதிபதி பாப்டே

சிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி

Published On 2020-01-22 08:40 GMT   |   Update On 2020-01-22 08:40 GMT
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் முடிவு எடுக்கும் வரை சிஏஏ தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டாம் என மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.  பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அம்ர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.



அதேசமயம், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமலும், மத்திய அரசின் வாதத்தை கேட்காமலும் ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை என்று தலைமை நீதிபதி பாப்டே  கூறினார். இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். 

‘குடியுரிமை சட்டம் தொடர்பான மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாநில உயர் நீதிமன்றங்கள் இது தொடர்பான எந்த மனுக்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டாம்’ என்றும் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தைப் பொருத்தவரை அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள நிலைமை வேறு என்பதால், அந்த மாநிலங்கள் தொடர்பான வழக்குகளை மட்டும் தனியாக விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News