செய்திகள்
கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தல் - கெஜ்ரிவால் மனுதாக்கல்

Published On 2020-01-21 07:54 GMT   |   Update On 2020-01-21 07:54 GMT
டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. ஆனால் ஆளும் ஆம்ஆத்மிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணியில் உள்ளன.

இதே போல காங்கிரஸ் கட்சியும் களத்தில் நிற்கிறது. ராஷ்டீரிய ஜனதா தளம் அந்த கட்சியின் கூட்டணியில் உள்ளது.

டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் கடைசி நாளான இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தார்.

பேரணியாக புறப்பட்டு சென்றபோது அதிகமான கூட்டத்தால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அவர் நேற்று மனுதாக்கல் செய்யவில்லை.

முன்னதாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒரு புறம் பா.ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

மற்றொரு புறம் பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர், மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஆகியவை உள்ளன. எனது ஒரே இலக்கு டெல்லியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல ஊழலை ஒழிப்பதுதான். ஆனால் அவர்களது ஒரே நோக்கம் என்னை தோற்கடிப்பதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சுனில் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மாநில யுவமோர்ச்சா அமைப்பின் தலைவர் ஆவார்.

காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் ரமேஷ் சபர்வால் களத்தில் உள்ளார்.

Tags:    

Similar News