செய்திகள்
சந்திரபாபு  நாயுடு

தெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு  நாயுடு கண்டனம்

Published On 2020-01-20 07:16 GMT   |   Update On 2020-01-20 07:16 GMT
தலைநகரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தெலுங்குதேசம் கட்சியினர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகரி:

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர். ஆந்திராவின் நலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. அமராவதியை சர்வதேச தரத்தில் உருவாக்க முந்தய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஆட்சி அமைந்தது.

இதையடுத்து, அமராவதியை தலைநகராக கட்டமைக்கும் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டினார். ஆந்திராவின் தலைநகரை விசாகப்பட்டினத்துக்கு மாற்ற முடிவு செய்தார்.

இதற்கான மசோதா ஆந்திர சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் தலைநகரை விசாகப்பட்டினத்துக்கு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ஆந்திர சட்டசபையில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தலைநகரை மாற்றும் மசோதா எளிதாக நிறைவேறிவிடும். ஆனால் தலைநகரை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தெலுங்குதேசம், ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அமராவதி பாதுகாப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆந்திரா முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதி களை சேர்ந்தவர்கள் அமராவதி அருகே முகாமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மீது எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தப்போவதாக அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அமராவதி அதன் சுற்றுப்புறங்களில் தங்கி இருந்த வேறு ஊர்க்காரர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று ஆந்திர அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து அமராவதி வந்த எதிர்க்கட்சிக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். காரணம் இல்லாமல் அமராவதிக்கு வந்தவர்கள் வெளியேற ஆந்திர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து எதிர்க்கட்சி பிரமுகர்கள் அமராவதி வந்து சட்டசபை முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மந்திரி ஜவகர் கிருஷ்ணா, பிரகாஷ் மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தனன், கர்நூல் மாவட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. நாகேஸ்வர ரெட்டி, சித்தூர் மாவட்ட முன்னாள் எம்.பி. சுகுணம்மா மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்க் கட்சிகளின் நிர்வாகிகள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தகவல்படி ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘ஒரே மாநிலம் ஒரே தலை நகரம்’ என்ற கோ‌ஷத்துடன் எதிர்க்கட்சிகளின் அமராவதி பாதுகாப்பு கூட்டுக்குழுவினர் நடத்தும் போராட்டம் காரணமாக வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிகை நடவடிக்கையாக முக்கிய பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித் துள்ளார். அவர் கூறி இருப்பதாது:-

மாநிலத்தின் தலைநகரை மாற்றுவது தேவையற்ற செயல். இந்த நடவடிக்கையால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வெளியேறி விடும். இதனால் மாநிலம் மேலும் கடன் சுமையை ஏற்க வேண்டியது வரும்.

அமராவதி கட்டமைப்பு பணிகளில் முறைகேடு நடந்து இருந்தால் அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க தடை இல்லை. அதைவிடுத்து தலைநகரை மாற்றுவதற்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வதும், வீட்டுக்காவலில் வைப்பதும் ஜனநாயக விரோத செயல். மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அதை அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர சட்டசபை பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமராவதி தலைநகராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள 29 கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News