செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை

Published On 2020-01-18 09:40 GMT   |   Update On 2020-01-18 09:40 GMT
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட செல்போன் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. பிரீபெய்ட் சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதி தரப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டன. 

அதன்பின்னர் மாநிலத்தில் அமைதி திரும்பி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், தடை செய்யப்பட்ட செல்போன் சேவை இன்று தொடங்கி உள்ளது. 



ஜம்மு காஷ்மீர் முழுவதிலும் உள்ள உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்பட்டுள்ளது. தீவிர ஆய்வுக்கு பிறகு இந்த சேவை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.

மேலும் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் மொபைலில் 2ஜி இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பட்காம், கந்தர்பால், பாரமுல்லா, ஸ்ரீநகர், குல் காம், அனந்த்நாக், ஷோபியான், புல்வாமா ஆகிய பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News