செய்திகள்
கோப்புப்படம்

ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ

Published On 2020-01-18 09:30 GMT   |   Update On 2020-01-18 09:30 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் காணாமல் போன ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவால் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ருத்ராப்பூர்:

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தம்சிங் நகரைச் சேர்ந்த நிர்மல்சிங் என்பவர் போலீசில் கடந்த மாதம் 26-ந்தேதி தனது நாயை காணவில்லை என்று புகார் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அமித்குமார் என்பவர் ஒரு நாயை காசீப்பூர் ரெயில் நிலைய பகுதியில் இருந்து மீட்டு வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டார். அதை பார்த்த நிர்மல்சிங்கின் மகன் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நிர்மல்சிங் நேற்று முன்தினம் அமித்குமார் வீட்டுக்கு சென்று தனது நாயை திரும்பி தரும்படி கோரிக்கை விடுத்தார். அதே சமயத்தில் அனுராக் சவுகான் என்பவரும் அமித்குமார் வீட்டுக்கு வந்து அந்த நாய்க்கு சொந்தம் கொண்டாடினார்.

ஒரே நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் அமித்குமார் யாரிடம் அதை கொடுப்பது என்று திணறினார். இதையடுத்து பிரச்சனை போலீஸ் நிலையத்துக்கு சென்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன் இதுபற்றி விசாரித்தார்.

2 பேர் சொந்தம் கொண்டாடிய நாய் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய்க்கு சொந்தம் கொண்டாடிய 2 பேரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து நாயை அவிழ்த்து விட்டனர்.

அந்த நாய் 2 பேரிடமும் சென்று வாலை ஆட்டியபடி நின்றது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த நாய் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

நேற்று காலை சப்- இன்ஸ்பெக்டர் மதன் புதிய முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொண்டு போய் அந்த நாயை அவிழ்த்து விட்டார். உடனடியாக அந்த நாய் நிர்மல்சிங் வீட்டுக்கு தேடி சென்றது.

தனது நாய் திரும்ப வந்ததால் நிர்மல்சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நாய்க்கு உரிமை கொண்டாடிய அனுராக் சவுகான் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றார்.

Tags:    

Similar News