செய்திகள்
சரத்பவார்

நான் அரசியலில் ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்

Published On 2020-01-17 02:17 GMT   |   Update On 2020-01-17 02:17 GMT
நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். உண்மையில் மராட்டிய மக்களும், இளைஞர்களும் அதற்கு அனுமதிக்கவில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார்.
புனே :

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது கடுமையான உழைப்பால் கட்சியை பல இடங்களில் வெற்றிபெற செய்தார். அதேபோல் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க அச்சாணியாகவும் விளங்கினார்.

இந்தநிலையில் சரத்பவார் பர்பானியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டார். விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரி அஜித் பவார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சரத்பவார் பேசியதாவது:-

நான் எனது பேச்சை தொடங்கும் முன்பு அவர்கள் (உத்தவ் தாக்கரே மற்றும் அஜித்பவார்) எனக்கு பூங்கொத்து கொடுத்தனர். இதை பார்க்க அவர்கள் என்னை ஓய்வுபெற அறிவுறுத்துவது போல் உள்ளது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில் மராட்டிய மக்களும், இளைஞர்களும் அதற்கு அனுமதிக்கவில்லை.

உலகெங்கிலும் விவசாயம் மாறி வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி ஆகியவையும் அதிகரித்துள்ளது.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் அவசியமான துறையாக விவசாயம் உள்ளது. எனவே தான் இந்த துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது, வளர்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது தேவைப்படுகிறது. இது விவசாயிகளின் வீட்டு வாசலை சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News