செய்திகள்
ரவீஷ் குமார்

உலகளாவிய ஒருமித்த கருத்தை சீனா பிரதிபலிக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

Published On 2020-01-16 12:04 GMT   |   Update On 2020-01-16 14:27 GMT
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் எழுப்ப பாகிஸ்தானுக்கு சீனா உதவியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக சர்வதேச நாடுகளை நாடியது. ஆனால், சீனாவை தவிர பாகிஸ்தானுக்கு எந்த நாடும் இந்த  விஷயத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிலும் காஷ்மீர் பிரச்சனையை சீனாவின் உதவியுடன் பலமுறை பாகிஸ்தான் எழுப்ப முயன்றது, ஆனால் அது மீண்டும் எந்த நாட்டின் ஆதரவையும் பெறவில்லை. காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நாடுகள் கூறியதால் பாகிஸ்தானின் சமீபத்திய முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் எழுப்ப பாகிஸ்தானுக்கு சீனா உதவியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்காலத்தில் சீனா இதுபோன்ற விவகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என கூறியுள்ளது. 

‘ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலை தவறாகப் பயன்படுத்த பாகிஸ்தானால் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கும், ஆபத்தான சூழ்நிலையைக் காண்பிப்பதற்குமான பாகிஸ்தானின் முயற்சி நம்பகத்தன்மை இல்லாததால் அது தோல்வியுற்றது. இது போன்ற விவகாரங்களை தீர்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சரியான இடம் அல்ல. 

மேலும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் எழுப்ப பாகிஸ்தானுக்கு சீனா உதவியது சரியானதல்ல. எதிர்காலத்தில் சீனா இதுபோன்ற விவகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். உலகளாவிய ஒருமித்த கருத்தையே சீனா பிரதிபலிக்க வேண்டும்’ என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News