செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

ஜேஎன்யூ வன்முறை- சிசிடிவி பதிவுகளை காவல்துறையிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-01-14 08:11 GMT   |   Update On 2020-01-14 08:11 GMT
ஜேஎன்யூ பல்கலைக்கழக வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், அதன் தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி, ஜே.என்.யூ. பேராசிரியர்கள் அமீத் பரமேஸ்வரன், அதுல் சூட் மற்றும் சுக்லா விநாயக் சாவந்த் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாட்ஸ்அப், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், டெல்லி காவல்துறை மற்றும் மாநில அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும், மோதலில் தொடர்புடையோர் பயன்படுத்திய வாட்ஸ்-அப் குழு உறுப்பினர்களின் போன்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. கூகுள், வாட்ஸ்அப் நிறுவனங்கள் தங்கள் நிறுவன கொள்கையின்படி, வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 
Tags:    

Similar News